அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலர் மீது தாக்குதல் நடத்துவதாக வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் டிரம்ப்…. காரணம் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
உலகின் தெற்கு நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிக்ஸ் விளங்குகிறது… பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் சுருக்கமே பிரிக்ஸ் என்றாலும், இதில் 20 உறுப்பு நாடுகள் உள்ளன.
டாலருக்கு மாற்றான கரன்சியை உருவாக்குவதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு காட்டும் முனைப்பு அமெரிக்காவுக்கு ஆரம்பத்தில் இருந்து எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.. இதன் காரணமாகவே அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார் டிரம்ப்.
அமெரிக்க கருவூல அலுவலகத்தின் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் சில நாடுகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருவது தெரியவந்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்புச் சரிவு, சர்வதேச அரசியல் நிலைத்தன்மை, ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை போன்றவை, அமெரிக்க கருவூல பத்திரங்கள்மீதான விருப்பத்தைக் குறைத்துள்ளன.
இது ஒரு வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு சாதகமாகப் பார்க்கப்படும் நிலையில், 2026ம் ஆண்டில் இந்தியா தலைமை தாங்கும் 20 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான சாடினார். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.
வரி விதிப்பு எச்சரிக்கைக்குப் பின்னர் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர முயற்சித்த பல நாடுகள் விலகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் வலுவான கரன்சியாக டாலர் இருக்க வேண்டும் என்பதிலும், சர்வதேச அளவில் தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியிருக்கும் டிரம்ப், வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரை பயன்படுத்துபவர்களுக்கு அமெரிக்கா சாதகமாக இருக்கும் என்றும், டாலரை தவிர்த்தால் அமெரிக்கா சாதகமாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
டாலருக்கு எதிரான நிலைப்பாட்டைப் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொண்டால், அந்நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்றும், இதன் மூலம் அந்த அமைப்பில் இருந்து அனைவரும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறியிருக்கிறார் டிரம்ப்.. பிரிக்ஸில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா ஆகிய 10 நாடுகள் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக உள்ளன.
10 நாடுகள் இணை உறுப்பினர்களாக இருக்கின்றன. பிரிக்ஸில் இணைய 2022-ல் முறையாக விண்ணப்பித்த அர்ஜெண்டினா, தற்போதைய அதிபரும், டிரம்பின் நண்பருமான ஜேவியர் மிலே பொறுப்பேற்ற பின்னர் அதனைக் கைவிட்டது.
அண்மையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் – அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே சந்தித்துக் கொண்ட நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றிய விவாதம் அங்கு மேலோங்கியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே பிரிக்ஸ் அமைப்பைக் கலைக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில், உலகளாவிய சுகாதாரம், காலநிலை போன்ற முக்கிய பிரச்னைகள் முன்னிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் பிரிக்ஸ் பற்றிய பேச்சு அவரது விஷமத்தனத்தையும், அமெரிக்காவின் பயத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
















