தொழிலாளர்களிடையே நிலவும் அதிருப்தி, பாகுபாட்டைச் சமாளிக்க சீனா 35 வயது சாபத்தை மாற்றத் திட்டம் தீட்டியுள்ளது. அது என்ன 35 வயது சாபம்….. விரிவாகப் பார்க்கலாம், இந்தச் செய்தித்தொகுப்பில்.
35 வயது சாபம் என்பது சீனாவின் பொதுவான சொற்றொடராகவே பொதுமக்கள் மனதில் ஆறாத வடுவாய் பதிந்துவிட்டது. சீனாவில் 35 வயதை எட்டியவர்களை வேலைக்கு அமர்த்தும் போக்கு குறைந்து வருவது அங்குள்ள தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
அங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர்கள் பணியமர்த்தும் வயதை 35 வயது எனக் கட்டுப்படுத்தியிருப்பதால், அங்கு 35 வயது என்பதே சாபமாகக் கருதப்படுகிறது. இது சீனா முழுவதும் தொழிலாளர்களின் முழக்கமாகவும் மாறியுள்ளது. வயதான மக்கள் தொகை என்பது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
மக்கள் தொகையைக் குறைக்க, ஒரு குழந்தை கொள்கை என்ற சீனாவின் முழக்கம், முப்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததன் காரணமாக நாட்டிற்கே அது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2035ம் ஆண்டில் குறைந்தபட்சம் 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது… இது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் தொகைக்குச் சமமான நிலை. அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் இந்தக் கொடூரமான விதிகளை பின்பற்றத் தொடங்கிவிட்டன.
இதனால் 30 வயது வரை வேலையைத் தேடாதவர்களுக்கு, வேலை கிடைப்பதில் சவாலான சூழலை ஏற்படுத்திவிடுகிறது. சீனாவில் வயது சார்பு என்பது புதிதல்ல என்றாலும், வேலைவாய்ப்புக்கான உரிமையில் இது சர்ச்சைகளைத் தூண்டுவதாக உள்ளது… கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபலமான, சில்லறை விற்பனை சந்தையான Pangdonglai-இல் கிட்டத்தட்ட 80 சதவிகித வேலைவாய்ப்புகள் 30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் அல்லது குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதி என்ற வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று சீனாவில் உள்ள வேலைவாய்ப்புகளில் வயது பாகுபாடு காட்டப்படுவது அதிகரித்திருப்பதை அரசு தொலைக்காட்சியான CCTV வெளிப்படுத்தியது… இது நாடு முழுவதும் பெரும் தலைவலியாக மாறிப் போன நிலையில், சீனா புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறது.
வயது பாகுபாட்டை ஒழிக்க, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வயது வரம்பை 35-லிருந்து 43 ஆக உயர்த்தி புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்களின் வயது வரம்பு 40-லிருந்து 43 ஆக நீட்டிக்கப்பட்டுளளதாகவும் வெளியான அறிவிப்பு பலரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதைத் தாமதப்படுத்துவதற்கான, நாட்டின் முற்போக்கு அணுகுமுறைக்கு ஏற்ப, அடுத்த ஆண்டிற்கான தேசிய சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை சீனா சரியான முறையில் மாற்றியமைத்ததாகக் குளோபல் டைம்ஸ் அரசுச் செய்தித்தாள் பாராட்டியுள்ளது.