ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. இந்திய நலன்களை பாதுகாப்பதில்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இந்தியாவும் சீனாவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கிறது என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டு. இதைக் காரணம் காட்டியே இந்திய பொருட்களுக்கு தடாலடியாக வரி விதித்தார் அதிபர் டிரம்ப்..
அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து யூரேனியத்தை வாங்குவதை நிறுத்தாமல் உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்கி வரும் டிரம்பின் கொள்கை முரண்பாடு சர்வதேச அளவில் விமர்சனத்தை விதைத்துள்ளன. அமெரிக்காவின் வரி விதிப்பை அசால்ட்டாக தட்டிவிட்ட இந்தியா, பிற நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்தி வருகிறது… அத்துடன் சுய சார்பு என்ற முழக்கத்தையும் முன்னிறுத்தி வருவது அமெரிக்காவை அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது…
8 போர்களை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த முடியாமல் திணறி வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை படிப்படியாக நிறுத்தி கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்து இருப்பதாக கூறினார்.
இருப்பினும், இந்தியாவால் அதனை உடனடியாக செய்ய முடியாது என்றும், இந்த செயல்முறை விரைவில் முடியும் என்றும் கூறியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்..
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்று கூறப்பட்டுள்ளது.
நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தால், இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்றும, நிலையான விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வதே இந்திய எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா தரப்பில் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயற்சி செய்து வருவதாகவும், டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது என்றும், இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் கருத்துக்குப் பதிலளித்த ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், என்ன செய்ய வேண்டும் என்று யாராலும் இந்தியாவிடம் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா-ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவையே உலகமே விரும்புகிறது என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் வழக்கம்போல் பொய்யுரைக்கும் டிரம்பின் கருத்தும் பொய்யாகிப் போனது.