தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தீண்டாமைக்கான வசை சொல்லாக, ‘காலனி’ என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும், அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள சாதி பெயர்களும் நீக்கப்படும் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், சாதிப் பெயர்களை நீக்கும் முடிவுக்கு பாராட்டு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, சாதிப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இருப்பினும், சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதியளித்ததுடன், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பத்துக்கு என்ன முடிவு? என்று தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.