தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்களால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வார விடுமுறையுடன் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி தங்கள் சொந்த வாகனங்களிலும், பேருந்துகள் மூலமாகவும் ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதேபோல, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டி போக்குவரத்து காவல்துறை சார்பில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற கனரக வாகனங்கள் பூந்தமல்லி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு நசரத்பேட்டை – காஞ்சிபுரம் மார்கத்தில் திருப்பி விடப்பட்டன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.