கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கும் மற்றும் பணிபுரியும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் 2 ஆயிரத்து 675 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன.
அக்டோபர் 17 முதல் 20-ம் தேதி வரை இந்த சேவை தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை குறைக்க வெளியூர் செல்லும் பாதைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் அலைச்சலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி, பொன்னமராவதி, கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்களால் மாவட்டம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் இன்னலுக்குள்ளாகினர்.
கோவை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் திரண்டதால், திருச்சி, தஞ்சாவூர், மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக கொச்சின் பைபாஸ் சாலையில் தொடங்கி சூலூர் புதிய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சொந்த ஊர் புறப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.