நீதிபதியை விமர்சித்த புகாரில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமின் வழங்க
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனடிப்படையில், அக்டோபர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட வரதராஜன், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நல பிரச்னைகளை எதிர்கொள்வதால், ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த விசாரணையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், நீதித்துறை, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அவதுாறாக கருத்துகளை பதிவிடும்போக்கு அதிகரித்துள்ளதால், ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.