திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் ஆத்திரத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதோடு மின்விளக்குகளும் சரியாக எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல வந்த பொதுமக்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீபாவளி விற்பனை களைக்கட்டியது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.