அமெரிக்காவை நோக்கிப் போதைப் பொருளை கொண்டு வந்த நீர்மூழ்கி கப்பலைத் தாக்கி அழித்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மற்றும் கரீபியன் கடல்பகுதி வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் கரீபியன் கடற்பகுதியில் பெண்டானில் உள்ளிட்ட போதை பொருட்களை ஏற்றிக் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சென்றுள்ளது.
இதனைக் கண்டறிந்த அமெரிக்க ராணுவம் அந்த நீர்மூழ்கி கப்பல்மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், உயிர்பிழைத்த ஈக்வடார் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த போதை பொருள்கள் அமெரிக்காவுக்குள் வந்திருந்தால் 25000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதுவரை அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தியதாக 27 பேர் கொல்லப்பட்டுள்ளதும், அவர்கள் கடத்தல்காரர்கள் என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க அரசு வழங்காததும் குறிப்பிடத்தக்கது.