1971ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போரில், 93000 வீரர்களுடன் பாகிஸ்தான் சரணாகதி அடைந்தது. இந்த சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தானியர்கள், 93000 பேண்ட் விழா 2.0 என்ற தலைப்பில் அதனைக் கொண்டாடி வருவது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான மோதலும், தாலிபான்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்ததும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் தற்காலிகமாகப் பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் பேண்ட்டை உருவிய தாலிபான்கள், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவிப் பாகிஸ்தான் காதைக் கிழித்திருக்கிறது…போர் நிறுத்தத்திற்கு மத்தியில் தாலிபான்கள் பாகிஸ்தான் டாங்கிகளில், 93 ஆயிரம் 2.0 என்ற முழக்கத்துடன் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது இணையத்தை சூடாக்கியிருக்கிறது.
1971 வங்கதேசப் போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 93000 வீரர்களுடன் சரணடைந்ததைக் குறிப்பிட்டுள்ள தாலிபான்கள், தற்போது 93000 பேன்ட் விழா 2.O கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தாலிபான்கள் கொண்டாடிய 93000 என்பது எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்காக மாறியிருக்கிறது. 1971ம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா நியாசி, இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித்சிங் அரோரா முன்னிலையில் இந்தியாவிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அந்தப் புகைப்படத்துடன் 93000 என்பது இணையத்தில் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது… 1971-ல் 13 நாட்கள் போர் நீடித்த நிலையில், பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் 93000 ஆயிரம் வீரர்களுடன், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்… இது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது.
அப்போது, எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றை கண்முன் நிழலாட வைக்கிறது… லெப்டினன்ட் ஜெனரல் நியாசி தனது லேன்யார்டு, பேட்ஜ்கள், பிஸ்டல் போன்றவற்றை ஒப்படைத்துவிட்டு சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை, ஆப்கானிஸ்தான் போரில் தெறித்து ஓடிய பாகிஸ்தானின் சூழலோடு ஒப்பிட்டு வருகின்றனர்.
தாலிபான்கள், பாகிஸ்தான் வீரர்களின் பேண்ட்டை(pant) காண்பிப்பது, இஸ்லாமாபாத் சரணடைந்துவிட்டதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் போர்க்காலத்தில் எல்லையில் தங்கள் ராணுவ நிலைகளைப் பாகிஸ்தான் கைவிட்டதால், உடைகளை வீரர்கள் விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சமூக ஊடகங்களில் அது அவ்வாறு எதிரொலிக்கவில்லை. 1971-ல் இந்தியர்களிடம் சரணடைந்தனர், 2025-ல் ஆப்கானிடம் சரணடைந்தனர் என்று கூறியுள்ள காபூலைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நீண்ட காலமாகிவிட்டது, ஆனால் 93000 அணிக்கு எதுவும் மாறவில்லை என்று பாகிஸ்தானை சாடியிருக்கிறார்.
மற்றொருவரோ, இன்றும் இல்லாமல் இருக்கலாம், நாளை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக ஒருநாள் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் 93000 என்ற சாதனையை முறியடிக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.
ராணுவ வீரரான கன்வால் ஜீத்சிங் தில்லான், 1971ம் ஆண்டின் புகழ்பெற்ற படத்தைப் பார்த்து, 93000 என்பது எப்போதும் விருப்பமான எண் என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்… மற்றொரு பயனரோ, பாகிஸ்தான் பின்பற்றும் ஒரே பாரம்பரியம் சரணடைதல் என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பாகிஸ்தானின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி வரும் ஆப்கானிஸ்தானியர்களால், சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடேறி வருகின்றன.
















