மண்சரிவால் சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்கும்பணி தொடர்வதால் மலை ரயில் சேவை 2 வது நாளாக இன்று ரத்து.செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும்
அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் அழகிய மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது
மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். . வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி _ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக மலை ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. ரயில் பாதை யோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரயில் பாதையில் குறுக்கே விழுந்தன,
இதனால் மலை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 19 ஆம் தேதி மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது .
அதனைத்தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். சீரமைக்கும் பணி நேற்று முடிவடையாததால் மீண்டும் இரண்டாவது நாளாக இன்று மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவையை ரத்து செய்து ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டாவது நாளாக மலைரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.