பிரான்ஸின் புகழ்பெற்ற அருங்காட்சியகத்திலிருந்து 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமன்னர் நெப்போலியனின் முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றான லூவ்ர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பிரான்சின் வரலாற்று சொத்துக்களாகக் கருதப்படும் மன்னர் நெப்போலியனின் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட விலை மதிப்பற்ற கிரீடம் போன்றவை லூவ்ர் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அவற்றை மர்ம நபர்கள் சினிமா பாணியில் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த 19-ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின் கொள்ளை சம்பவம் அரங்கேறியது வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னே நதிக்கரையோர பால்கனி வழியாக MECHANICAL LIFT-ஐ பயன்படுத்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த 4 மர்ம நபர்கள், கண்ணாடி ஜன்னல்களை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் பாதுகாவலர்களை அச்சுறுத்திய அவர்கள், அங்குக் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அரச முத்திரைகள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, இருசக்கர வாகனங்கள்மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்ததாக அந்நாட்டின் கலாசார அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் முழுமையாகக் கண்காணிக்கப்படாத பகுதிகளைக் கொள்ளையர்கள் முன்னரே அறிந்திருந்ததால், அவர்களால் எளிதாகக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்புவதற்கு முன் அவர்களைப் பிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், பாதுகாவலர்களைப் பணயமாக வைத்து அவர்கள் தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னர் 3-ம் நெப்போலியன், அரசி யூஜினி, அரசி மேரி லூயிஸ், அரசி மேரி அமெலி மற்றும் அரசி ஹார்டென்ஸ் ஆகியோருக்கு சொந்தமான தங்க மாலை, முத்து மாலை, வைரக்கல் கிரீடம், ரத்தின ஆபரணங்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கொள்ளையர்களின் கைதவறி கீழே விழுந்த இரு ஆபரணங்கள் மீட்கப்பட்டதாகவும் அருங்காட்சியக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக 60 அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்களை அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளையாகக் கருதப்படும் இந்தக் கொள்ளை சம்பவம், நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தங்கள் வரலாற்று சான்றுகளுக்கு எதிரான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அதிபர் மேக்ரான், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம், அரசியல் ரீதியான விமர்சனங்களையும், சமூக ஊடகங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. குறிப்பாக இதே அருங்காட்சியகத்தில் கடந்த 1911-ம் ஆண்டு வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியம் திருடப்பட்டது பலரால் நினைவுகூரப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொள்ளை சம்பவம் தொடர்பான முழு விசாரணையும் முடிவடைந்த பிறகே அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் முன்பதிவு செய்த மக்களுக்கு அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.