கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கூறியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. இந்தச் சூழலை இந்தியாவின் பிரச்னையாகக் கருதாமல், தனது சொந்த பிரச்னையாகக் கனடா பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது…
2023ஆம் ஆண்டில் காலிஸ்தான் குழுக்களை கனடா கையாள்வது குறித்த இந்தியாவின் விமர்சனத்தை அந்நாட்டின் அப்போதைய பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார். மேலும், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் கொலை, பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் கனடா போலீசார் அபத்தமான குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதன் காரணமாக ஆறு தூதர்களை கனடா வெளியேற்ற, இந்தியாவும் எதிர்வினையாற்றியது. இந்தியாவும் கனடாவும் உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், கனடாவின் குற்றச்சாட்டுகளை தினேஷ் பட்நாயக் நிராகரித்தார்.
இந்தியா ஆதாரங்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தினார். CTV உடனான ஒரு நேர்காணலின்போது, ஒரு தூதருக்கே பாதுகாப்பு தேவைப்படும் சூழல்தான் கனடாவில் உள்ளதாகக் கூறிய அவர், இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வை கனடா வழங்கவில்லை என்று குறைகூறினார்.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியர்களை பிரச்னையாக பார்க்ககூடாது என்றும், கனடாவைச் சேர்ந்த சிலர் பிரிவினையை ஏற்படுத்த சர்ச்சையை கிளப்புவதாகவும் இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்தார். மேலும் கனடாவில் காலிஸ்தான் சமூகத்தினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய தூதர், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதில்லை என்று தெளிவுபடுத்தினார்.
கனடாவில் காலிஸ்தான் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியது உள்நாட்டுக்கான சவால் என்று கூறிய இந்திய தூதர், ஒட்டாவாவிற்கும், புதுடெல்லிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முழு பாதுகாப்பு சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
காலிஸ்தான் அச்சுறுத்தலால், கனடாவில் ஒரு உயர் ஆணையர் பாதுகாப்புடன் இருக்கவேண்டியது தனக்கு விசித்திரமாக உள்ளது என்று அவர் கூறினார்.இதற்கிடையே, இந்திய தூதர்கள் கனடாவுக்குத் திரும்புவது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துமா என்று கனட அமைச்சர் கேரி ஆனந்த சங்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார். கனடா நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையானதை நாங்கள் செய்வோம் என்று மட்டும் அவர் கூறினார். பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரமானது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கும் இந்திய தூதர், கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.