தொடர் கனமழையால் நாகையில் சுமார் ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாகத் தலையாமழை, கீராந்தி, சின்னதும்பூர், பெரிய தும்பூர், சோழவித்தியாபுரம் கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் துவங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களைப் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















