உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு 7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரியுள்ளது.
2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் வாயிலாக லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரதமர், முன்னாள் பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் குறித்த ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கர் உள்ள நிலையில், அவருக்குக் கீழ் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் உள்ளனர்.
இந்நிலையில், ஏழு உயர் ரக பி.எம்.டபிள்யூ., கார்களை வாங்க விரும்பிய லோக்பால் அமைப்பு அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது.
கடந்த 16ம் தேதியிட்ட ஒப்பந்தத்தில், பி.எம்.டபிள்யூ. – 3 வரிசை கார்களை வாங்க புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், வெள்ளை நிறத்தில், ஸ்போர்ட் ரக கார்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.