ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மீனவர்கள் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மண்டபம் அருகே கலைஞர் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருள்களான பால், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்ககூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குடியிருப்புவாசிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.
மேலும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து வீட்டின் மொட்டை மாடியில் மீனவ குடும்பங்கள் தஞ்சம் அடைந்துள்ளன.
சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துத் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.