ஈரானில் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கிய அரசு அதிகாரிகள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில், அதே விதிகளை மீறும் ஒரு வீடியோ வெளியாகி அவர்களின் இரட்டை நிலைபாட்டை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
ஈரானில் ஹிஜாப் அணிவது பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சட்டமாக உள்ளது. இது ஈரானில் 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் தலைமுடி மற்றும் உடலை மறைக்கும் உடைகளை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் அபராதம், கைது நடவடிக்கைகள் மட்டுமின்றி, சில சமயங்களில் வன்முறை நிறைந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
இந்தச் சட்ட விதிமீறல்களை கண்காணிக்கவே ஈரானில் MORALITY POLICE என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இணையத்தில் வெளியான சில திருமண நிகழ்ச்சியின் வீடியோக்கள், இந்தச் சட்டத்தை ஈரானின் சில உயர்நிலை அதிகாரிகளே மீறுவதை அம்பலப்படுத்தி மக்களின் கோபத்தை கிளப்பியுள்ளது. ஈரான் உச்சத் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனெயின் நெருங்கிய உதவியாளராக அலி ஷம்கானி செயல்பட்டு வருகிறார்.
இவர் ஈரான் அரசின் முக்கிய பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். 2022-ம் ஆண்டு, பெண்களின் கட்டாய ஹிஜாப் விதிகளுக்கு எதிராக நாட்டில் பெரும் எழுச்சி எற்பட்டபோது, அந்தப் போராட்டங்களை அடக்கக் கட்டளை வழங்கியவர்களில் அலி ஷம்கானியும் ஒருவராக இருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு இவரது மகளின் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்ற நிலையில், திருமண நிகழ்வுகள் தொடர்பான வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியானது.
அதில், மணமகள் உடலை மறைக்கும் உடைகள் மற்றும் ஹிஜாப் இன்றி, வெள்ளை நிற STRAPLESS உடையில் தோன்றும் காட்சிகள் நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல, வீடியோவில் மணமகளின் தாயாரும் விதிகளை மீறி நீல நிற லேஸ் உடையில் காட்சியளித்தார். மேலும் பல பெண்களும் அவ்விடத்தில் ஹிஹாப் அணியாமல் தென்பட்டனர்.
இந்த வீடியோ வெளியானது முதல், மதச்சட்டம் மக்களுக்கு மட்டும்தானா, அரசு அதிகாரிகளுக்கு இது பொருந்தாதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஈரானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் மசீ அலினெஜாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இஸ்லாமிய மதத்தின் பெயரில் ஹிஜாப் அணியாத பெண்கள் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்படும்போது, அலி ஷம்கானியின் மகள் மட்டும் STRAPLESS உடையில் திருமணம் செய்வது வஞ்சகத்தின் உச்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோலப் பலரும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து, அரசு அதிகாரிகள் தாங்களே நம்பாத சட்டங்களை முன்னிறுத்தி மக்களை துன்புறுத்தி வருவதாகவும், அதிகாரிகளின் வாழ்க்கை முறை பாதுகாக்கதக்கதாக இருக்க வேண்டும் என்றும் கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனது மகளின் திருமண வீடியோவை இஸ்ரேல் ஹேக் செய்து வெளியிட்டதாக அலி ஷம்கானி குற்றம் சாட்டியுள்ளார். மற்றொருபுறம் முன்னாள் அமைச்சர் இஸ்ஸத்துல்லா சார்காமியோ, அந்நிகழ்ச்சி பெண்களுக்கு மட்டும் நடத்தப்பட்டது எனவும், அதில் இருந்த ஆண்கள் பெரும்பாலும் உறவினர்களே என்றும் கூறி ஷம்கானியை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இருப்பினும் இந்தச் சமாதான பேச்சுக்கள் மக்களிடையே எழுந்த கோபத்தை அடக்காத நிலையில், ஹிஜாப் விதிகள் மக்களுக்கு மட்டுமே அன்றி அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஈரான் அரசின் இரட்டை நிலைபாடு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.