கனமழை காரணமாக ராமநாதபுரம் அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகிச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர். காவனூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விதைகளை விதைத்துள்ளனர். தற்போது இளம் நெற்பயிர்கள் துளிர்த்து வரும் நிலையில், கனமழையால் வயல்கள் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















