வளைகுடா நாடுகளில் நவீன அடிமைத்தனமாகக் கருதப்படும் கஃபாலா சட்டத்தை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. கஃபாலா சட்டத்தின் மூலம் இந்தியர்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்…
மலையாள நாவலைத் தழுவி நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன “ஆடுஜீவிதம்” கஃபாலா சட்டத்தையும், அதனால் வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்வோர் படும் துன்பத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியது.
கஃபாலா என்பதன் பொருள், ஸ்பான்சர்ஷிப் என்றும், கஃபீல் என்பது முதலாளி என்றும் அரபு மொழியில் பொருள்படுகிறது. 1950-களில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்தவும், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் இந்த கஃபாலா அமைப்பு. இது, ஒரு தொழிலாளியின் சட்டப்பூர்வ அந்தஸ்தை ஒற்றை முதலாளி அல்லது கஃபீல் நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது.
இதன் மூலம் விசா, வேலை, தொழிலாளர் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடு என அனைத்து அதிகாரங்களையும் ஸ்பான்சர் வைத்திருக்க அனுமதிக்கிறது… உள்ளூர் வேலைகளைப் பாதுகாப்பதற்கும், நிலையான பணியாளர்களை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்ட கஃபாலா அமைப்பு, வீட்டுவேலை, கட்டுமானம், விருந்தோம்பல், துப்புரவு உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டும், துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் ஆயுதமாக மாறியது… அனைத்து அதிகாரங்களையும் முதலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம், பாஸ்போர்ட் பறிமுதல், ஊதியம் வழங்காமை, மிருகத்தனமான வேலை நேரம், உடல் மற்றும் பாலியல் வன்முறை போன்ற கொடூரமான துஷ்பிரயோகங்களுக்கு கஃபாலா அமைப்பு கதவைத் திறந்தது.
இதன் காரணமாகப் பல தொழிலாளர்கள், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் குறைந்த கூலித் தொழிலாளர்ளை, சட்டப்பூர்வ ஆதரவு இல்லாமல் தனிமையில் சிக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது… 2017ம் ஆண்டில் கர்நாடகாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், மாதம் 25 ஆயிரம் சம்பளம் என்ற வாக்குறுதிப்படி சவுதி அரேபியா சென்றார். ஆனால், அவர், அவரது கஃபீல் மூலம் கடத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார்.
அவரது எதிர்ப்பு, பட்டினியை பரிசாக அளித்தது, முதுகு உடைக்கப்பட்டது, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, தாங்க முடியாத சித்ரவதைக்கு ஆளாக்கியது, பல மாதங்களாக இதே நிலைதான்.
அடிமை தனத்திற்கு எதிராக ஒற்றை ஆளாக, அடைபட்ட அறைக்குள் போராடிய செவிலியரின் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு அவரை விடுவித்தார் அவரது கஃபில். சர்வதேச விசாரணை மற்றும் உள்நாட்டு சீர்திருத்த அழுத்தங்கள் அதிகரித்ததன் காரணமாக, கஃபாலா அமைப்பு பாதுகாக்க முடியாததாக மாறியதால், சவுதி அரேபியா அதை ஒழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த நடைமுறையை கஃபாலா அமைப்பைச் சவுதி அரேபியா ரத்து செய்திருந்தாலும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் இதற்கு முடிவுரை எழுதப்படவில்லை.
அங்கு 2 கோடியே 40 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் கஃபாலா பாணி கட்டுப்பாட்டின் கீழ் தான் காலத்தைக் கழிக்கின்றனர். இதில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 75 லட்சம் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
மனித உரிமை குழுக்களால் நவீன கால அடிமைத்தனம் என்று விமர்சிக்கப்பட்ட கஃபாலா அமைப்பு, தொழிலாளர்களை ஒரே முதலாளியுடன் பிணைத்திருந்தது… வேலைகளை மாற்றவும், நாட்டைவிட்டு வெளியேறவும், சித்ரவதை குறித்து புகார் அளிக்கவும், கஃபீல் அதாவது ஸ்பான்சரின் அனுமதியை கோரும் வகையில் இருந்தது. தற்போது அந்தச் சிஸ்டம் ரத்தானதால், தொழிலாளர்கள் வேலை பிடிக்கவில்லை என்றால், சுதந்திரமாக வேலைகளை மாற்ற முடியும், கஃபாலா அமைப்பின் ஒப்புதல் இன்றி சவுதி அரேபியாவை விட்டு வெளியேறலாம், தேவைப்பட்டால் தொழிலாளர் நீதிமன்றங்களையும் அணுகலாம்… இவற்றிற்கு கஃபீலின் அதாவது முதலாளியின் ஒப்புதல் தேவைப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் கஃபாலா ஒழிக்கப்பட்டதன் காரணமாக, 1 கோடியே 30 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், 25 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளைகுடாவில் கட்டாய உழைப்பை கணிசமாகக் குறைக்கக்கூடிய ஒரு துணிச்சலான நடவடிக்கை இது பார்க்கப்பட்டாலும், காகிதத்தில் உள்ள சட்டங்களை ரத்து செய்வது உண்மையான நீதியாக மாற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
















