பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்டுள்ள மகா கூட்டணியில் குழப்பம் தீராத நிலையில், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.. கூட்டணி கட்சியினரே கூட்டணி வேட்பாளரை எதிர்த்து வேட்புமனுக்களை அளித்துள்ள நிலையில், மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பீகார் மாநிலம், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி வரை தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் தங்களுக்குள்ளேயே போட்டிப்போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறது ஆர்.ஜே.டி., காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி. பீகார் தேர்தலில் ஆளும் ஜேடியு, பாஜக கூட்டணிக்கு எதிராக, மகா கூட்டணி களமிறங்கியிருக்கிறது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சேன் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளன… ஆளுங்கட்சிக்கு நிகராகப் பலமான கூட்டணியை அமைத்துள்ளதாக மார்தட்டி கொண்டாலும், மகா கூட்டணியில் குழப்பம் தீர்ந்தபாடில்லை.
அவர்களது கூட்டணி கட்சிகளே வில்லங்கமாக மாறியிருப்பதால், மகா கூட்டணி தட்டுதடுமாறி வருகிறது… முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்திருக்கும் நிலையில், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி இன்னமும் நீடிக்கிறது. தொகுதிகளை ஒதுக்காமல் இழுத்தடித்ததன் காரணமாக, கூட்டணியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் அதிரடியாக அறிவித்திருப்பது மகா கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தேஜஸ்வி யாதவ் தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வருகிறது.
தொகுதி பங்கீடு பற்றிய குழப்பத்திற்கு மத்தியில், ஆர்ஜேடி 143 வேட்பாளர்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டது.. காங்கிரஸ் 61 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. 12 தொகுதிகளுக்காக ஆர்ஜேடி, காங்கிரஸ் அடித்துக் கொள்ளும் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நாளில் இறுதி முடிவை எடுக்கவிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…. இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற தலைவர்கள், அந்தந்த கட்சித் தலைமைகளின் ஈகோவையும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பச்வாரா தொகுதி ஒரு சிறந்த உதாரணமாக கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவரும் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராம்தியோ ராயின் மகனுமான சிவபிரகாஷ் கரிப் தாஸ் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் பச்வாராவை கேட்டது… ஆனால், சிபிஐ, 2020-ல் வெறும் 484 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தனது வேட்பாளர் அவதேஷ் குமார் ராய்க்கு அந்த இடத்தைக் கோரியது.
இரு தரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில், பச்வாரா தொகுதியில் சிபிஐ மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்களது வேட்பாளர்களை நேருக்கு நேராக நிறுத்தியிருக்கிறது… கூட்டணியில் நீடிக்கும் குழப்பம், அக்கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.. இதுபோன்ற செயல்பாடுகள், கூட்டணி பலவீனமாக்கியதோடு, ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
















