வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள் என பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்கி 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகள் பெரும்பாலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ அழைப்பில் பேசும்போது இனி எச்சரிக்கை செய்தி காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஃபேஸ்புக் மெசெஞ்சரில்’ செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும் எனவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.