கோவையில் குப்பை அள்ளும் வாகனங்களைச் சுடுகாட்டில் நிறுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகக் கூறி, வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் குப்பைகளைக் கொண்டு செல்ல 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வாகனங்களை, இனி சுடுகாடுகளில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 4 ஓட்டுநர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தீண்டாமை மனநிலையுடன் அதிகாரிகள் செயல்படுவதாகத் தெரிவித்துள்ள ஓட்டுநர்கள், சம்மந்தப்பட்டவர்கள் மீது SC-ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அவர்கள் புகாரளித்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.