ரஷ்யாவில் தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில் ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாகத் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவில் பணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அகமது ரஷ்ய-உக்ரைன் போர் மண்டலத்தில் சிக்கி கொண்டார்.
ரஷ்யாவில் சிக்கி போர் பயிற்சிக்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கணவரை மீட்க கோரி ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது மனைவி, வெளியுறவு அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவில் இருப்பதாகக் கூறப்படும் முகமது அகமது செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில் ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தாம் இருக்கும் இடம் ஒரு எல்லை என்றும், போர் நடந்து கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார். போர் மண்டலத்திற்குள் செல்ல மறுத்த 4 இந்தியர்களின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை ரஷ்யாவுக்கு அனுப்பிய முகவரை விட்டு விடாதீர்கள் என்றும், வேலைவாய்ப்பு என்ற போர்வையில் தான் வலுக்கட்டாயமாகப் போர் மண்டலத்திற்கு இழுத்து வரப்பட்டதாகவும் இளைஞர் கூறியுள்ளார்.