கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலைக்குடி கிராமத்தை அரசு அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
கனமழையால் கிராமத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை நின்ற பின்பும் கிராமத்தின் பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் கடல்போலக் காட்சியளிப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்ததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முழங்கால் அளவுக்குத் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கிராமத்தில் முறையான வடிகால் மேலாண்மை இல்லாததே இந்த அவலத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், மழைநீர் தேக்கத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை இதுவரை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிடவில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.