முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் கட்டுக்குள் வந்ததால், அணை நீரை வைகையில் இருப்பு வைக்கும் பொருட்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஐந்தாயிரத்து 506 கனஅடியில் இருந்து நான்காயிரத்து 622 கனஅடியாகக் குறைந்துள்ளது.
ரூல்கர்வ்” அட்டவணைப்படி, அக்டோபர் 30ஆம் தேதி வரை 138 அடியாக உயர்த்த விதி உள்ளதால், முல்லை பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு தொடர்கிறது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாகக் கட்டுக்குள் வந்துள்ளதால், கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு நான்காயிரத்து 368 கனஅடியிலிருந்து, மூன்றாயிரத்து 303 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 655 கனஅடியில் இருந்து ஆயிரத்து 822 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு மழை முன்னறிவிப்பு உள்ளதால், அணை நிலவரங்களில் எந்நேரமும் மாற்றம் வரலாம் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.