கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், நீதிமன்ற உத்தரவை மீறிப் பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது, கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், அந்தக் கட்டுமானங்களை அறநிலையத் துறைச்சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு நவம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்ற சுற்றறிக்கையை அறநிலையத் துறை வெளியிட வேண்டும் எனவும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
















