இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். மெஹுல் சோக்சி அடைக்கப்பட உள்ள மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையின் 12வது பாரக் அறையின் வசதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, மும்பையில் இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் நிறுவப்பட்டது. இந்த ஏடிஎம்மில் பொதுமக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உட்பட அனைத்து வகையான நகைகளையும் வாங்க முடியும் என்று விளம்பரப்படுத்தப் பட்டது. ஆனால் இந்தத் தங்க ஏடிஎம் மக்களைக் கவர்ந்திழுக்க முடியவில்லை. புதுமையான இந்தத் தங்க ஏடிஎம்கள் பிரபல வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸியால் நிறுவப்பட்டவை.
மெஹுல் சோக்ஸி, அவரது மருமகன் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள்மீது பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் புகார் அளித்தது. இந்த புகாரில், 14000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து, அந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, உள் விசாரணை முடிந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மோசடி குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அளித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மருமகன் நீரவ் மோடி ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
இந்தியாவில் இருந்து தப்பியோடிய மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி சோக்ஸி ஆகியோர் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வருவதாக அசோசியேட்டட் டைம்ஸ் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது. மேலும், மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி சோக்ஸியும் அந்நாட்டின் எஃப் (F) ரெசிடென்சி கார்டை வைத்திருபதாகவும் தெரிவித்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பெல்ஜியம் அரசிடம் மத்திய அரசு வேண்டுகோள் வைத்தது.
மெஹுல் சோக்ஸி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இந்திய மற்றும் பெல்ஜிய சட்டத்தின் கீழ் நாடு கடத்தத்தக்கவை என்று தீர்ப்பளித்த பெல்ஜிய நீதிமன்றம், சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. மேலும், பெல்ஜிய காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதும் ஏற்புடையதே என்றும் பெல்ஜிய நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனால், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் அவரை மீண்டும் விசாரணைக்குக் கொண்டு வருவதற்கான மத்திய அரசின் முயற்சியில் இருந்த தடை நீங்கியது. மத்திய அரசு வழங்கிய விவரங்களை குறிப்பிட்டு, மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையின் 12வது பாரக் அறையில் மெஹுல் சோக்ஸி அடைக்கப்படுவார் என்றும், அதில் இரண்டு அறைகள் மற்றும் ஒரு தனி கழிப்பறை ஆகியவை இருக்கும் என்றும் பெல்ஜிய நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையின் ஆர்தர் சாலை சிறையில் உள்ள பாராக் எண் 12 அறையின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 46 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பாராக்கில் இணைக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இரண்டு அறைகள் உள்ளன. மூன்று மின்விசிறிகள், தொங்கும் விளக்குகள், நல்ல காற்றோட்டம், சூரிய ஒளி வருவதற்கான மூன்று ஜன்னல்கள், மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு உட்பட பல வசதிகள் உள்ளன. அறையில் செய்தி மற்றும் பொழுதுபோக்குக்காக ஒரு டிவி உள்ளது.
இயற்கை வெளிச்சம் போதுமானதாக இல்லாதபோது, போதுமான வெளிச்சத்தை அளிக்க ஆறு தொங்கும் குழாய் விளக்குகள் உள்ளன சோக்ஸிக்கு தனியார் குளியலறை, நடைப்பயிற்சி பகுதி, யோகா அமர்வுகள், பயிற்சி, பத்திரிகைகள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி செய்ய அறைக்கு வெளியே ஒரு பரந்த நடைபாதை உள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய மனித உரிமை தரங்களுக்கு ஏற்ப மெஹுல் சோக்ஸி அடைக்கப்பட உள்ள செல் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டுத் தப்பியோடியவர்களைக் கொண்டு வந்து அடைக்க ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு சிறைச்சாலை அறையாவது சர்வதேச தர வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெரும் முயற்சியின் விளைவாகும் இதே வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது.
மெஹுல் சோக்ஸியின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட நிலையில், அவருக்கும் அவரது நிறுவனங்களுக்கும் தொடர்புடைய 2,565 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் வைரம் போல் பளபளப்பாக மின்னிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியின் கதை, போலி நகைகளைப் போல ஏமாற்றம் அளிப்பதாக முடிந்துள்ளது.