தஞ்சையில் துணை முதலமைச்சர் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் விவசாயிகளின் நெல்மணிகள் மழை நீரில் நனைந்து முளைக்கத் தொடங்கின.
இதனை அடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் சரக்கு ரயில்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரக்கு ரயிலில் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவதை பார்வையிட வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், மாலைக்குள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட வேண்டிய நெல் மூட்டைகள், துணை முதல்வர் பார்வையிடுவதற்காக ரயிலில் ஏற்றப்படாமல் வைக்கப்பட்டன.
உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு சென்றபோது மழை வந்துவிட்டதால், நெல் மூட்டைகள் நனையும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றப்பட்டன. நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் நனையும் நிலை நீடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மூட்டைகளை நனைய விட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
















