ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போர் நிறுத்தத்துக்காக இதுவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை.
புதின் மேற்பார்வையில் அணு ஆயுத போர் ஒத்திகையிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் இரு பெரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லுாகாயில் மீது பொருளாதார தடையை அமல்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 6 சதவீத பங்கைக் கொண்டு உள்ளன.
அமெரிக்காவின் தடையால் வியாழக்கிழமையன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, 5.43 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 65.99 டாலருக்கு விற்பனையானது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.
















