சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாகை மாவட்டம், சிக்கல் பகுதியில் உள்ள சிங்காரவேலர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தொடர்ந்து, கோயிலின் நான்கு பிரகார வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ஆம் தேதி காலைத் தேரோட்டமும், இரவு அன்னை நெடுங்கண்ணியிடம் முருகப்பெருமாள் வேல் வாங்கும்போது வியர்வை சிந்தும் அதிசய நிகழ்வும் நடைபெற உள்ளதாகவும், 27ஆம் தேதி சூரசம்கார நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















