அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக, எட்டாவது கப்பலை அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதையடுத்து வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கரீபியன் கடல் பகுதியில் இதுவரை ஏழு கப்பல்களை, அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப் பொருட்களுடன் சென்ற கப்பலை தாக்கி அழித்ததாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அல் – குவைதா பயங்கரவாதிகள் நம் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்தது போல, இந்தப் போதைப்பொருள் கும்பல்களும் நம் மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பழுப்பு நிற பைகள் நிரம்பிய சிறிய படகு ஒன்று கடலில் செல்வதும், சில வினாடிகளில் அது வெடித்து தீப்பற்றி எரியும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
















