அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் ரஷ்யா தாக்கப்பட்டால், அதற்கான பதிலடி மிகவும் வலுவாக இருக்கும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரை நிறுத்த மறுப்பதால், ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கைக் கொண்டு உள்ளன.
இந்நிறுவனங்கள் ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளன. அமெரிக்காவின் தடையால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யா மீதான தடைகள் நியாயமற்ற செயல் எனக் கூறினார்.
இந்தத் தடைகள் சில விளைவுகளை ஏற்படுத்துமே தவிர, அவை ரஷ்யாவின் பொருளாதாரத்தை கணிசமாகப் பாதிக்காது எனவும் புதின் தெளிவுபடுத்தினார்.
மேலும், ரஷ்யா டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் அதற்கான பதிலடி மிகவும் வலுவாக இருக்கும் எனவும் புதின் எச்சரித்தார்.
போரை நிறுத்தாவிட்டால் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்கி உதவுவோம் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
















