ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாகப் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
எல்லை பிரச்னை காரணமாகப் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த ஒப்புக் கொண்டன.
இருப்பினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டிருப்பதால் வர்த்தகங்கள் பாதிப்படைந்து அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானுடனான மோதலால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை அதிகரித்து, இந்திய மதிப்பில் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையின் தாக்கம் பாகிஸ்தானில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாக நாளொன்றுக்கு 1 மில்லியன் டாலர் வர்த்தகத்தையும் பாகிஸ்தான் இழந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது விலைவாசி உயர்வால் செய்வதறியாது தவித்து வருகிறது.
















