உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் தேசியக் கடன் 3 ஆயிரத்து 339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல் வெளியானது.
அந்த வகையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் தேசியக் கடன் 3 ஆயிரத்து 339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு அமெரிக்கர் மீதும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபின், 2 டிரில்லியன் டாலர் அளவுக்குக் கடன் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசின் செலவீனங்களுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை அலுவலக கணிப்பின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
















