தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதியில், 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், 1998ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்ததாகவும், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கானது தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது
இதையடுத்து, பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















