ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய துறையாக செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் விபத்துகளின்போது உடனடியாக எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி ரயில்வே குட்செட் யார்டில் நடைபெற்றது.
ஏசி மற்றும் பொது ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டும், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேன் உள்ளிட்டவை குட் ஷெட்டு யார்டுக்கு கொண்டுவரப்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட ஒத்திகைகளை மீட்பு குழுவினர் தத்துரூபமாக செய்து காட்டினர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், தொழில்நுட்ப துறையினர், காவல் துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















