விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா போதை இளைஞர்களைக் கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தூர் பகுதியில், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கஞ்சா போதையில் திரியும் சில இளைஞர்கள், பொதுமக்களைத் தாக்குவது, வீடு புகுந்து பொருட்களைச் சேதப்படுத்துவது எனச் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சிறுவர்களை இளைஞர்கள் 5 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சமுத்திரம், சூர்யா உள்ளிட்ட 5 பேரை வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.
இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சா போதையில் சுற்றித்திரியும் இளைஞர்களைக் கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















