சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமை பண்புக்கு அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழுப் பாராட்டு தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி கடந்த 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை, அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஆதரவாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுக்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ள சீனாவில், அதிபர் ஷி ஜின்பிங் 3-வது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடிக்கிறார்.
அவரது தலைமைக்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மூத்த ராணுவ தளபதிகள் போர்க்கொடி உயர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் காரணமாக ஏராளமான தலைவர்கள் மாயமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 3-வது மிகப்பெரிய தலைவரான ஹீ வெய்டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















