இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் வகையில், குனார் ஆற்றில் அணை கட்டுமானத்தை “விரைவில்” தொடங்குமாறு ஆப்கானிஸ்தானின் உச்சத் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இராணுவ நடவடிக்கை மட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.
இது பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆப்கானின் குனார் நதியில் அணைகள் கட்டுவதை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை அதன் துணை அமைச்சர் முஹாஜர் ஃபராஹி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 480 கிலோமீட்டர் நீளமுள்ள குனார் நதி, வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைகளில் உருவாகிறது. முதலில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ப்ரோகில் கணவாய் வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழைகிறது. ஆப்கானின் குனார் நதி பாகிஸ்தானில் சித்ரால் நதி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நதி குனார், நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாகத் தெற்கே பாய்ந்து, பின்னர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் மீண்டும் நுழைந்து, ஜலாலாபாத் நகருக்கு அருகில் காபூல் நதியில் இணைகிறது. குனார் நதி பாகிஸ்தானில் காபூல் நதி ஆகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பாயும் மிகப்பெரிய, மிகவும் விரிவான எல்லை தாண்டிய நதி இதுவாகும்.
இன்னொரு புறம் காபூல் நதி, அட்டோக் அருகில் சிந்து நதியுடன் இணைகிறது. குனார் நதியின் குறுக்கே அணை கட்டுவதால் நீர் ஓட்டம் குறைவது சிந்து நதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைக் கணிசமாக அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நாட்டின் நீர் இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது தலிபான் அரசு. நாட்டின் நதி அமைப்புகளை எரிசக்தி உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் அண்டை நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அணை கட்டுமானம் மற்றும் நீர்மின்சார மேம்பாட்டுக்கான திட்டங்களை தீவிரமாக தாலிபான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்த 7 நாட்களுக்குப் பிறகு குனார் நதியில் அணை கட்டுமான அறிவிப்பு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் விவசாய வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட நீர்மின் திட்டங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஏற்கெனவே, கடந்த 2016ம் ஆண்டு ஹெராத் மாகாணத்தில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா உதவியுடன் சல்மா அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை 42 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து,75,000 ஹெக்டேர் நிலத்துக்கு நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுகிறது. இந்தச் சல்மா அணை மூலம், மின்சார இறக்குமதியைச் சார்ந்திருப்பதை ஆப்கான் அரசு கணிசமாகக் குறைத்தது.
அதே போல், காபூல் ஆற்றின் துணை நதியான மைதான் நதியில் ஷாதூத் அணையை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அணை,147 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை உற்பத்தி செய்கிறது.
இது காபூலில் வசிக்கும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குவதோடு, 4,000 ஹெக்டேர் வரை வறண்ட நிலத்தின் விவசாயத்துக்கு நீர்ப்பாசனத்துக்கும் பயன்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறையான இருதரப்பு நீர் பகிர்வு ஒப்பந்தம் இல்லாத நிலையில், ஆப்கானின் அணை கட்டும் முடிவு பாகிஸ்தானில் நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















