ஆந்திர மாநிலம் கர்னூலில் ஏற்பட்ட கோர விபத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட எரிந்ததில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தப் பயங்கர விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மளமளவெனத் தீப்பிடித்து எரிந்த பேருந்து. தப்பிக்க முடியாமல் அலறி துடித்த பயணிகள் என நெஞ்சை உலுக்கும் கோர காட்சிகள்தான் 20-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23ம் தேதி இரவு 10.30 மணிக்கு வி.காவேரி என்ற ஆம்னி பேருந்து, 41 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாகப் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்ததது.
குளிர்சாதன வசதி, படுக்கை வசதி கொண்ட அந்தப் பேருந்து புறப்பட்டு 4.30 மணி நேரத்தைக் கடந்திருக்கும். பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்… அதிகாலை 3 மணிக்கு, கர்னூல் மாவட்டம் 44வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு என்ற பகுதியைக் கடந்தபோது, யாருமே எதிர்பார்க்காத அந்தப் பயங்கர விபத்து நேரிட்டது.
அதிவேகத்தில் சென்ற ஆம்னி பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோத, அதிலிருந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொள்ள, சாலையில் உரசியதால் தீப்பொறி கிளம்பியது. ஓட்டுநர் சுதாரித்து பேருந்தை நிறுத்துவதற்குள், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடிக்க, பேருந்தில் இருந்த டீசல் டேங்கிலும் தீப்பற்றியது. குபீர் எனப் பற்றி எரிந்த தீ, பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது.
அதிகாலை நேரம், ஆழ்ந்த தூக்கம் எனப் பயணிகள் இருக்க, என்னவென்று நிலைமையை உணர்வதற்குள், பேருந்து முழுவதும் தீப்பரவியது. குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் பேருந்தில் கண்ணாடி உடைத்து சில பயணிகளும், எமர்ஜென்சி எக்ஸிட் வழியாகச் சில பயணிகளும் தப்பித்தனர். மேல் படுக்கையில் இருந்த பயணிகள் கீழே இறங்குவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
நெருப்பு மற்றும் புகை பேருந்துக்குள் இருந்த பயணிகளின் உடலைக் கருக்கி உயிரைக் குடித்துவிட்டது. தீ விபத்தில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது. பேருந்து இருக்கையிலேயே பலர் உயிருடன் எரிந்து எலும்புக் கூடாகக் கிடந்தது நெஞ்சை உலுக்கும் காட்சியாக இருந்தது.
காயமடைந்து சாலையில் அலறித் துடித்துக் கொண்டிருந்த பலருக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. குறிப்பாக, விஞ்சாமூர் மாவட்டம் கொல்லவர்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 37 வயது கொல்லா ரமேஷ், அவரது மனைவி அனுஷா, 12 வயது மகன் மணிஷ், 10 வயது மகள் மணித்வா ஆகிய நால்வரும் பேருந்து விபத்தில் பலியானது வேதனையின் உச்சம்.
பெங்களூருவில் பணியாற்றிய கொல்லா ரமேஷ், தனது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவை முடித்துவிட்டு, ஹைதராபாத் திரும்பியபோதுதான் இந்தத் துயரம் நிகழ்ந்திருக்கிறது. தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும், கருகிய உடல்களை மீட்டனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவினர்.
உடற்கூராய்வு மற்றும் டிஎன்ஏ சோதனைக்குப் பின் அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தீபாவளியன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்த உறவுகள் தற்போது தூரமாகிவிட்டதாகக் கண்ணீரில் கரைந்து போயுள்ள குடும்பத்தினருக்கு யாரும் ஆறுதல் கூற இயலாது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
















