வைகை அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் பொதுப்பணிதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அணையின் மதகுகள் மற்றும் நீர்மின் நிலையம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















