திருவாரூர் அருகே குளத்தில் குதித்த காதலனை காப்பாற்றுவதற்காக, காதலியும் தண்ணீரில் குதித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலை தொடர வேண்டாம் என ஜெயஸ்ரீ கூறியுள்ளார். ஜெயஸ்ரீயை சந்திப்பதற்காகக் கும்பகோணம் சென்ற பிரவீன், இருசக்கர வாகனத்தில் அவரைத் திருவாரூர் அழைத்துச் சென்றுள்ளார்.
திருக்கண்ணமங்கை அருகே உள்ள சேட்டாகுளம் கரையோரம் அமர்ந்து இருவரும் பேசியுள்ளனர். அப்போது, வீட்டில் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், காதலை தொடர வேண்டாம் எனவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த பிரவீன், திடீரென அருகில் உள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயஸ்ரீ குளத்தின் அருகே சென்று பிரவீனை அழைத்துள்ளார். ஆனால், எந்தப் பதிலும் வராததால், ஜெயஸ்ரீ குளத்தில் குதித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
















