தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 18ம் தேதி முதல் சுருளி அருவியில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் சுருளி அருவியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், அருவிக்கு செல்லும் படிகள் சேதமடைந்தன. எனவே, அருவியில் நீர்வரத்து சீரானதும், சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்ட பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 நாட்களைக் கடந்தும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடை உத்தரவு நீடிப்பதாக தேனி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கடந்த 14 நாட்களாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஆகையால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் மழையானது நீடிக்க வாய்ப்புள்ளதால், அருவியில் நீர்வரத்து சீராகும்வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை உத்தரவு தொடரும் என தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
















