கனடாவில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரமொன்றின் எதிரொலியாக, அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்குக் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வடஅமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார்.
இதனால் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் வரி விதிப்பு பாதிப்புகுறித்து விளம்பரமொன்று வெளியிடப்பட்டது. அதில், வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான அதிக வரிகள் அமெரிக்க பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனும் மறைந்த அமெரிக்க குடியரசுக் கட்சியின் தலைவர் ரொனால்ட் ரீகனின் வானொலி பேச்சு மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமொன்றில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், ‘உண்மைகளை அவர்கள் கடுமையாகத் தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10 சதவீதம் அதிகமாக உயர்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மோசமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவு தற்போது சிக்கலாகியுள்ளது.
















