திருநெல்வேலி மாவட்டம் கொத்தன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுக் கொத்தன்குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்தக் கொத்தன்குளம், சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கிவருகிறது.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும், விவசாயத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வந்த கொத்தன்குளம் கடந்த சில ஆண்டுகளாகவே குப்பைகளைக் கொட்டும் குளமாக மாறி வருகிறது.
கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இந்தக் கொத்தன்குளம் மட்டுமல்லாது அதன் பாசனப்பகுதியிலும் கொட்டப்பட்டு வருகிறது.
அதில் இறைச்சிக் கழிவுகளும், பயன்படுத்திய மருத்துவக் கழிவுகளும் கலந்திருப்பதால் குளத்தின் நீர் நேரடியாக நஞ்சாகிக் கொண்டிருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பருவமழை தொடங்கிய நிலையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையால், குப்பைக் குவியல்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பன்மடங்கு அதிகரித்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. நீண்ட நெடும் நாட்களாகத் தேங்கியிருக்கும் குப்பைகளில் இருந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொட்டப்படும் கழிவுகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டும் குப்பைகள் கொட்டும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் கொத்தன் குளத்தை முறையாகச் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















