நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாகச் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், இரவு நேரத்தில் கோத்தகிரி, அரவேணு, பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை ஒன்று அந்தப் பகுதியில் இருந்த முயலைக் கவ்விச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சிறுத்தை சென்ற சிறிது நேரத்தில் அதே பகுதியில் கரடி ஒன்று உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் விலங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















