இரண்டு மூன்று டிகிரிகள் படிப்பதையே பலர் சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் ஒருவர் சத்தமே இல்லாமல் 150 டிகிரிகளை முடித்துள்ளார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தாண்டு தொடக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ட்ராகன் என்ற திரைப்படம் வெளியானது. ஒன்றை டிகிரியின் அவசியம் குறித்தும், அதை முடிக்கக் கதாநாயகன் என்ன பாடுபடுகிறான் என்பதையும் அந்த படம் காட்டியிருந்தது.
இப்படியொரு டிகிரியை முடிப்பதே பலருக்கு குதிரை கொம்பாக இருக்கும் சூழலில், சென்னையை சேர்ந்த ஒருவர் 150க்கும் மேற்பட்ட டிகிரிகளை முடித்து ஒட்டுமொத்த மாணவ சமூதாயத்தையும் அலறவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆர்.கே.எம் விவேகானந்தா கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் வணிகத் துறைத் தலைவராகவும் உள்ள இவர் 1981ம் ஆண்டு தனது முதல் டிகிரியை முடித்தார். இருந்தபோதும் அவரது கற்றல் ஆர்வம் தீரவில்லை. ஆகவே, மேலும் பல பட்டப்படிப்புகளிலும், டிப்ளமோ கோர்ஸ்களிலும் சேர்ந்தார்.
பொருளாதாரம், பொலிட்டிகல் சயன்ஸ், சட்டம், பொது நிர்வாகம், இதழியல், கிரிமினாலஜி, சைக்காலஜி என என்னென்ன படிப்புகள் உள்ளதோ அனைத்தையும் அவர் படிக்கத் தொடங்கினார். பேராசிரியர் பார்த்திபன் இன்றைய தேதிக்கு 13 எம்ஏ பட்டங்களும், 12 பி.ஃபில் பட்டங்களும், 14 எம்பிஏ பட்டங்களும், 8 எ.காம் பட்டங்களும் முடித்துள்ளார். அத்துடன், 11 சான்றிதழ் படிப்புகளையும், 9 PG diploma படிப்புகளையும், 20 professional course-களையும் நிறைவு செய்துள்ளார்.
இதன் காரணமாகப் பலரும் அவரை நடமாடும் என்சைக்ளோபீடியா எனவும், பட்டங்களின் களஞ்சியம் எனவும் அழைக்கின்றனர். அவரிடம் பயிலும் மாணவர்கள் காலை எழுந்து படிக்கிறார்களோ இல்லையோ, அவர் சரியாகக் காலை 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து படிக்கத் தொடங்கிவிடுவார். பின்னர் கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும் அவர், மீண்டும் 11.30 மணி வரை படிப்பார். பல ஆண்டுகளாக இதனை ஒரு வழக்கமாக அவர் கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவர் ஓய்வெடுப்பதில்லை. அன்றைக்கும்கூட படிப்பு, ஆராய்ச்சி, தேர்வு என எதிலாவது மூழ்கியிருப்பார். தற்போது மேலாண்மையில் முனைவர் பட்டமும், நிறுவனச் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் படித்து வருவதாகப் பேராசிரியர் பார்த்திபன் தெரிவிக்கிறார். சாதாரணமாக ஒரு டிகிரி படிப்பதற்கே கணிசமான செலவு ஏற்படும்.
இந்த நிலையில், 150க்கும் மேற்பட்ட டிகிரிகளை முடிக்க எத்தனை செலவாகியிருக்கும் என்பதை விளக்க தேவையில்லை. தனது சம்பளத்தில் 90 சதவீத தொகை கட்டணங்களுக்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும், தேர்வு செலவுகளுக்கும் செல்வதாக அவர் கூறுகிறார். பேராசிரியர் பார்த்திபனின் இந்தக் கற்றல் பயணத்திற்கு அவரது மனைவி செல்வக்குமாரி மிகுந்த உறுதுணையாக இருந்து வருகிறார்.
அவரும் 9 டிகிரிகள் முடித்துள்ளார் என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பே. 16 வயதில் தொடங்கிய பார்த்திபனின் பட்டப் படிப்புப் பயணம், 60 வயதை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தான் படிப்பை மிகவும் நேசிப்பதாகவும், படிப்பது ஒன்றும் தனக்கு கடினமாக இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும், தேர்வுகளுக்குத் தயாராவதும், புதிய பட்டங்கள் பெறுவதும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறுகிறார். “சரி சார். வாழ்க்கையில் உங்கள் இலக்குதான் என்ன?” என்ற கேள்விக்கு, “விரைவில் 200 டிகிரிகளை பெறுவதுதான் தனது வாழ்நாள் லட்சியம்” என அவர் கூறியுள்ளது பல மாணவர்களை மூச்சடைக்க செய்துள்ளது.
















