கடந்த 6 மாதங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதலீடு மோசடியில் சிக்கி சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் நன்கு படித்தவர்கள் கூட மோசடியில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் முக்கிய நகரங்களில் சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதலீடு மோசடிகளில் சிக்கி சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 65% குற்றங்கள் பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்துள்ளன. அந்தப் பட்டியலில் 26% குற்றங்களுடன் பெங்களூர் முதலிடத்தில் இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 76% பேர் 30 முதல் 60 வயதுடையவர்கள் எனவும், மொத்தமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் சராசரி இழப்புத் தொகை சுமார் 52 லட்சம் ரூபாய் எனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
















