21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கான நூற்றாண்டு எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் காணோளி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, தன்னுடைய ஆசியான் குடும்பத்துடன் இணைய, தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, ஆசியான் அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்றார்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் வசிப்பதாகக் கூறிய அவர், நாம் புவியியல், வர்த்தக உறவை மட்டுமின்றி, கலாசார உறவுகளையும் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
எனவே, இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நிற்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு எனத் தெரிவித்தார்.
















