திருப்பரங்குன்றம் அருகே புதிததாகக் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்துள்ள ரசிகரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர் திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நகர செயலாளராக இருந்து வருகிறார்.
தீவிர ரஜினி ரசிகரான சரவணன், திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் ஆயிரத்து 300 சதுர அடியில் மாடி வீடு கட்டியுள்ளார்.
இந்த வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என்ற பெயர் சூட்டியும், வீட்டின் முன்புறம் நடிகர் ரஜினியின் மார்பளவு மெழுகு சிலை வைத்தும் கோயில்போல் அமைத்துள்ளார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் இருந்தபோது ரஜினியின் புகைப்படத்தைத் தனது தந்தை கிழித்தெறிந்ததாகவும், சொந்த வீடுக் கட்டி ரஜினியின் பெயரை வைத்துக் கொள்ளுமாறு தந்தை கூறியதாகவும் தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சொன்னதை தற்போது நிறைவேற்றியதாகக் கூறிய அவர், நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வீட்டின் கிரகப்பிரவேசத்தில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள ரஜினியின் மார்பளவு சிலைக்குத் தினமும் பூஜை செய்துவிட்டு அன்றாட வாழ்க்கையை தொடங்குவேன் எனக் கோல்டன் சரவணன் தெரிவித்துள்ளார்.
















